புதுடெல்லி: காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜார்கண்ட் மாநிலத்திற்கு நிலக்கரி ராயல்டி மற்றும் மத்திய அரசின் திட்ட பலன்கள் என மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.
கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களால், மாநிலத்திற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. 1,01,142 கோடி நில இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. பொது நிலுவைத் தொகையாக ரூ.32,000 கோடியும், எடுக்கப்பட்ட நிலக்கரிக்கான ராயல்டியின் கீழ் ரூ.2,500 கோடியும் செலுத்தப்படாமல் உள்ளது. உயிரியல் ரீதியாக பிறந்த பிரதமர் இந்த நிதியை ஏன் இன்னும் விடுவிக்கவில்லை?
இம்மாநில மக்கள் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்ததால்தான் அவர்களை மாற்றாந்தாய் போல் நடத்துகிறார்களா? மாநில பா.ஜ., தலைமையால் ஏன் மாநிலத்திற்கு எந்த நிதியையும் பெற முடியவில்லை. ஜார்க்கண்ட் மக்களிடம் வாக்கு கேட்கும் முன், மாநிலத்துக்கு ரூ.1.36 லட்சம் கோடியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு பாஜக பதிலளிக்க வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
முன்னதாக மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஞ்சியில் இன்று வெளியிட்டார். மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும்.