பழநி: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கான தொகுதிகளை குறைத்தால், மத்திய அரசுக்கு எதிராக தேமுதிக போராடி, தமிழக மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசுடன் கைகோர்க்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்லம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: –
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. காரணம், 2006-ம் ஆண்டு தேமுதிக அமைப்புத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தமிழக விவசாயிகள் பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாய தொழில்நுட்பங்களை கற்று, அதன்படி தமிழகத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது.

மெட்ரோ ரயில் மற்றும் பெண்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளனர். வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து அமலாக்கத்துறை உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தாய்மொழியைக் காப்பது, அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டால், தமிழக அரசுடன் இணைந்து தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு எதிராக தேமுதிக போராடும்,” என்றார்.