தூத்துக்குடி: தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார்.
மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.