புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், “என் மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது ஆனால் ஆபத்தானது. கடந்த 35 நாட்களில் என் மீது நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குற்றவாளிகளை விட, புகாரளிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று செய்தி அனுப்பியுள்ளார்.
கும்பல் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பால்யான் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக, எங்கள் எம்.எல்.ஏ.க்கள் குறிவைக்கப்படுகின்றனர். டெல்லி மக்களை பாதுகாக்க குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் நேர்மையற்ற முறைகளை பா.ஜ.க. பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சனிக்கிழமை மாளவியா நகரில் திரவம் வீசப்பட்டார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும்” என்றார்.