சென்னை: தமிழக அரசிடம் ஹெலிகாப்டர், தனி விமானம் ஆகியவை சொந்தமாக இல்லை என்பது சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்து பெற்ற தகவலில் தெரியவந்து உள்ளது.
டெல்லி, மத்தியபிரதேசம், பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் வைத்துள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு தருணங்களில் அரசுக்கு பயன் உள்ளதாக இருக்கின்றன.
அதாவது மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, அவர்களை ஒரு இடத்தில் இருந்து குறுகிய தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்கு வான் வழியாக விரைவாக அழைத்து செல்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இதேபோல மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும், அவற்றில் சிக்குபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கும், மருத்துவ உதவி வழங்குவதற்கும், இடரில் சிக்கிய நோயாளிகளை வேகமாக மீட்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ள பாதிப்பின்போது சேத விவரங்களை கணக்கிடுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்தவாறு முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்வது வாடிக்கையாக உள்ளது. ஹெலிகாப்டர் சொந்தமாக இல்லாத மாநிலங்கள் மத்திய அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரையோ அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு வாங்கியோ பயன்படுத்தி வருகின்றன. இதனால் அனுமதி பெறுவதில் கால தாமதம், தேவை இல்லாத பண செலவு ஏற்படுகிறது.
இந்த சூழலில் தமிழக அரசிடம் ஹெலிகாப்டர், தனி விமானம் ஆகியவை சொந்தமாக இல்லை என்பது சென்னையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்து பெற்ற தகவலில் தெரியவந்து உள்ளது.
இதேபோல, சொந்தமாக விமானம், ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பொதுத்துறை தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை போன்று தமிழக அரசும் தனது பயன்பாட்டுக்காக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.