செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில், நாதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக, பாமக ஒன்றிய செயலாளர் சுரேஷ், பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி நேற்று காலை 10.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட், அன்றைய தினம் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமானிடம் செய்தியாளர்கள் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘தமிழகத்தில் எத்தனை ஆறுகள், எத்தனை ஏரிகள், எத்தனை குளங்கள், எத்தனை சமூகங்கள் உள்ளன, அவர்களின் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எத்தனை பேர், எவ்வளவு வாக்கு சதவீதம் என்று எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் வியூகத்தை என்ன செய்யப் போகிறார்? காமராஜர், அண்ணா போன்ற தமிழகத்தை ஆண்ட முந்தைய தலைவர்கள் என்ன வியூகம் வகுத்தார்கள்? உடலில் கொழுப்பு இருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பணத்தில் கொழுப்பாக இருந்தால், வாயில் கொழுப்பாக இருந்தால் இதெல்லாம் அவசியம். அதைப் பற்றி பேசி நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதீர்கள்.’