புதுடில்லி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 420 பேர் உயிரிழந்தனர். சுமார் 397 பேர் படுகாயமடைந்த நிலையில், 47 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு கேரள வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என பதிவாகியது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்ததாக முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் பேசிய வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
ஒரு ஆண்டாக வயநாட்டிற்கு நிதி விடுவிக்கக் கோரி வருகிறோம். சில நிதிகள் விடுவிக்கப்பட்டன, ஆனால் அவை போதுமானதாக இல்லை, கடன்களாக வழங்கப்பட்டன. இது முன்னெப்போதும் இல்லாதது. மக்கள் தங்கள் உயிர்களையும் முழு வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும்போது கடன்களை திருப்பிச் செலுத்துவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 1,600 கட்டிடங்கள் தரைமட்டமாகின. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.