மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஷிண்டே கட்சித் தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே முக்கிய அமைச்சர் பதவிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், இலாகாப் பங்கீடு தொடர்கிறது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா ஷிண்டே, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
அதிக இடங்கள் இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். இந்நிலையில், முதல்வர் பதவியை துறந்ததால், தனக்கு உள்துறை, வருவாய், பொதுப்பணி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி வருகிறார்.
57 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனது கட்சிக்கு 11 முதல் 13 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவார் தனது கட்சிக்கு நிதியமைச்சர் பதவியை கோரி வருவதாகத் தெரிகிறது. நேற்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஷிண்டே மற்றும் பவார் கோரும் துறைகள் மீது பாஜக கண்காணித்து வருவதால், மகாராஷ்டிராவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் பதவியேற்று 5 நாட்களுக்குப் பிறகும் இலாகாக்கள் ஒதுக்குவதில் தாமதம் நீடிக்கிறது.