தஞ்சாவூர்: பொதுத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை நிலையம் சார்பில் இலவச எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் ரெஜினா புக் சென்டர் என்ற பெயரில் புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் ரபீக் அகமது.
இவர் கடந்த 13 வருடங்களாக 10, 11, 12 ஆம் வகுப்பு படித்து வரும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர் (பென்சில் கூர் தீட்டி) உள்ளிட்ட எழுதுபொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை தனது தந்தையார் மறைந்த சாகுல்ஹமீது நினைவாக வழங்கி வருகிறார்.
அதே போல், இந்த ஆண்டும் 36 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5,650 மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.
நிகழ்வில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த உமர் ஜகுபர், மஸ்தான், பேராவூரணி பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.