சென்னை: கல்வித்துறையில் 2,009 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டின் போது தெரிவித்தார்.
‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’ என்று பாரதிதாசன் பாடியதிற்கிணங்க, கல்விச் செல்வத்தைக் குழந்தைகளுக்கு வழங்கி அறிவுச் சமூகத்தைப் படைத்திடும் நோக்கத்தில், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ‘இல்லம் தேடிக் கல்வி புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’, ‘கல்லூரிக் கனவு’, ‘எண்ணும் எழுத்தும் நான் முதல்வன்’ போன்ற முத்தான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றைப் போதுமான அளவில் அமைத்து, கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ஆகியவை 673 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 2,009 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலான பயிலரங்குகள் நடத்தும் முயற்சி, கோடைக் கொண்டாட்டம்’ எனும் நிகழ்வின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.
ஐவகை நிலங்களின் பெயரில் குழுக்கள் அமைத்து, மாணவர்தம் தலைமைத்துவப் பண்பை முகிழ்த்தெழச் செய்ய, ‘மகிழ் முற்றம்’ எனும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மாணவருக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் நலம் பேண, ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
பிற மாநிலங்களிலும், குறிப்பிட்ட சில உலக நாடுகளிலும் உள்ள கல்விச்சூழலை அறிந்துகொள்ள, மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கென சிறப்பு சுற்றுலாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.