புதுடில்லி: ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்… பேப்பர் கப், பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி குடிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஐஐடி வெளியிட்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
100 மிலி பிளாஸ்டிக் கப்பில் ஒரு முறை டீ, காப்பி குடிக்கும் போது 25000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாக ஐஐடி கரக்பூர் தெரிவித்துள்ளது. சில்வர், கண்ணாடி குவளைகளில் டீ, காபி குடிப்பதை விட பிளாஸ்டிக், பேப்பர் கப்புகளில் குடிப்பது சுகாதாரமானது என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதுவே குழந்தைகளுக்குப் பால் ஊற்றிக்கொடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களால் லட்சகணக்கான பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை சில்வர், கண்ணாடி டம்ளர்களில் டீ, காபி குடிப்பது தான் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்று அதிகப்படியான பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்லும் போது, அவை உடலில் படிமமாகச் சேர்ந்து உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேப்பர் கப் என்றாலும், அதில் ஊற்றப்படும் திரவங்கள் ஊறாமல் இருக்க பிளாஸ்டிக், கேண்டில் கோட்டிங் அளிக்கப்படுகிறது. இதுவும் பிளாஸ்டிக் துகள்களே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்று ஒன்றை அறிமுகம் செய்தாலும், அதில் உள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.