சென்னை : வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் அவதி அடைய கூடாது என்பதற்காகத்தான் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இந்த கோடை விடுமுறையை குறைக்கும் பணியில் தனியார் பள்ளிகள் இறங்கி உள்ளன.
வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுவதற்காக ஏப்ரல் மத்தியில் இருந்து மே இறுதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஆனால், சில தனியார் பள்ளிகள் இதனை படிப்படியாக குறைத்து வருகின்றன. சென்னையில் இயங்கும் சில பள்ளிகள், ஏப்ரல் 25 வரை சிறப்பு வகுப்புகள் நடத்தவுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களை வெயிலில் இருந்து காப்பாற்றுமா பள்ளிக்கல்வித்துறை? என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.
சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை மன உளைச்சல் மற்றும் வெயில் தாக்கத்தோடு பள்ளிக்கு வரச் செய்யும் இந்த நடவடிக்கையை கல்வித்துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.