பெரும்பாலானோர் தலையணை இல்லாமல் தூங்குவது இல்லை. தலையணை வைத்து தூங்குவது முதுகெலும்புக்கு நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. இது பெரும்பாலும் தனிப்பட்ட தூக்க நிலைகளை பொறுத்தது. தலையணை பயன்படுத்துவதாலும் பயன்படுத்தாமல் இருப்பதாலும் சில நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.
தலையணை இல்லாமல் தூங்குவதால் முதுகெலும்பின் இயற்கையான தோரணை சீராக இருக்கும். ஒரு தடிமனான தலையணை கழுத்தை மேல்நோக்கி சாய்ப்பதால், முதுகெலும்பின் சமநிலை பாதிக்கப்படும். ஆனால் தலையணை இல்லாமல் தூங்குவது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதால், வலி மற்றும் அழுத்தம் ஏற்படாமல் உடலுக்கு நல்லதாக இருக்கும்.
தலையணை இல்லாமல் தூங்குவது கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்க உதவுகிறது. அதிக உயரம் கொண்ட தலையணை பயன்படுத்தும் போது முதுகெலும்பின் இயல்பு மாறி, விறைப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படும். இதனால் முதுகுவலி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கழுத்து வலி உள்ளவர்களுக்கு தலையணை இல்லாமல் தூங்குவது சிறந்த தேர்வாக இருக்கலாம்.
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த தலையணை இல்லாமல் தூங்குவது உதவலாம். உடல், இயற்கையான தூக்க நிலைக்கு மாறிக்கொள்ளும் தன்மை பெற்றதால், நாள்பட்ட கழுத்து வலியை அனுபவிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது போல் சில நன்மைகள் இருந்தாலும், சிலருக்கு தலையணை இல்லாமல் தூங்குவதால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படலாம். இதற்கு காரணம், தலை முதுகெலும்புடன் சரியாக சீரமைக்க ஓரளவு ஆதரவு தேவைப்படுவது. அந்த ஆதரவு இல்லாமல் தூங்கும்போது, கழுத்து மற்றும் தோள்களில் வலி ஏற்படலாம்.
முதுகுவலி அல்லது பக்கவாட்டில் தூங்கும் பழக்கமுள்ளவர்களுக்கு சரியான முதுகெலும்பு தோரணை பராமரிக்க ஓரளவு ஆதரவு தேவைப்படும். அவர்கள் நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பிறகு தலையணையைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், மிக உயரமான தலையணை பயன்படுத்துவது முதுகெலும்புக்கு எந்த விதத்திலும் நல்லதல்ல.
முற்றிலும் தலையணை இல்லாமல் தூங்குவதற்கு முன் மெல்லிய மற்றும் சற்றே இறுக்கமான தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கழுத்து மற்றும் முதுகெலும்பை புதிய நிலைக்கு பழகச் செய்யும். மேலும் உறுதியான மெத்தையைப் பயன்படுத்துவது முதுகெலும்பு சீரமைப்பை பேண உதவும்.
தலையணையைப் பயன்படுத்தாத போது கழுத்துக்கு ஆதரவு இல்லாமல் உணர்ந்தால், சிறிதளவு உயரத்துக்கு சிறிய துணியை சுருட்டி வைத்து தூங்கலாம். ஆனால், தலையணை இல்லாமல் தூங்குவதால் தொடர்ந்து அசௌகரியம் அல்லது வலி ஏற்பட்டால், லேசான தலையணையைப் பயன்படுத்தலாம். இதுகுறித்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது முக்கியம்