சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில், பெரியாறு பாசனம் மூலம் இரு பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சுமார் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, சின்னமனூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
காற்றும் மழையும் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. சின்னமனூர், கன்னியம்பட்டி, முத்துலாபுரம், ஊத்துப்பட்டி, வாய்க்கால்பட்டி, எரசக்கநாயக்கனூர், ஆப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 20 ஏக்கரில் பச்சை மற்றும் சிவப்பு வாழைகள் சேதமடைந்துள்ளன. இதில், ஐந்து மாத வயதுடைய வாழைகள் முதல் அறுவடைக்கு தயாராக உள்ள வாழைகள் வரை சுமார் ஒரு லட்சம் மரங்கள் சேதமடைந்துள்ளன. இதை அரசு வேளாண் துறை மூலம் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.