சென்னை: இந்தியாவில் மின்சார கார் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், சென்னையில் புதிய ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்’ அமைக்கிறது. இந்த வாரமே ஷோரூம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தென்னிந்தியாவில் டெஸ்லாவின் மூன்றாவது விற்பனை மையமாக சென்னை உருவாகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழில்நுட்பத்தில் உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்திய சந்தையிலும் விற்பனையை தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களில் அனுபவ மையங்களை அமைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
ஏற்கனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் டெஸ்லா தனது மையங்களை அமைத்துள்ள நிலையில், சென்னையில் புதிய அனுபவ மையம் இந்த வாரம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டெஸ்லாவின் ஷோரூம்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும். தென்னிந்தியாவில் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு அடுத்ததாக சென்னையிலும் டெஸ்லா கால் பதிக்கிறது.
இந்தியாவில் செப்டம்பர் மாத விற்பனையும் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவரை இந்த மாதத்தில் சுமார் 150 கார்களும், நடப்பு ஆண்டில் 600-க்கும் மேற்பட்ட கார்களும் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 38 டெஸ்லா கார்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தின் மின்சார கார் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2026-ம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 19,700-க்கும் மேற்பட்ட மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் சொகுசு கார் நிறுவனங்களின் மின்சார வாகனங்களும் கணிசமான பங்களிப்பை பெற்றுள்ளன.
தற்போது இந்தியாவில் டெஸ்லா மாடல் Y பிரீமியம் ரியர் வீல் டிரைவ் மற்றும் மாடல் Y L ஆல் வீல் டிரைவ் ஆகிய மாடல்களை விற்பனை செய்கிறது. மாடல் Y பிரீமியம் ரியர் வீல் டிரைவ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.89 லட்சமாகவும், 6 பேர் அமரும் மாடல் Y L ஆல் வீல் டிரைவ் காரின் விலை ரூ.61.99 லட்சத்தில் தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதிய மையம் திறக்கப்படுவதன் மூலம் தமிழகத்தில் டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு நேரடி அனுபவம், விற்பனை மற்றும் சேவை வசதிகள் மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
