மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 மதகுகள் மூலம் உபரி நீர் திறப்பு இன்று (ஆகஸ்ட் 7) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பாசனத்திற்காக நீர்மின் நிலையங்கள் மூலம் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை கடந்த 30ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று இரவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,200 கனஅடியாக இருந்தது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 17,500 கன அடி வீதம், 16 மதகுகள் மூலம் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் மொத்தம் 22,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் கடந்த 8 நாட்களுக்கு பிறகு 16 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றுவது இன்று அதிகாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மின் நிலையங்கள் மூலம் இன்று காலை 5 மணி வரை 21,500 கன அடி திறந்து விடப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 6 மணி முதல் 21,500 கன அடியில் இருந்து 16,000 கன அடியாகவும், பின்னர் காலை 8 மணி முதல் 16 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாகவும் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது