கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் ஒருவர் மரணம் குறித்து விசாரிக்கும் ஒருநபர் விசாரணை குழு 11 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரம், மடூர், மாதவேச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 229 பேர் மதுவில் மெத்தனால் கலந்த குடித்தால் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் அடங்கிய ஒருநபர் கமிஷன் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் விசாரணை நடத்தி வரும் கமிஷன் தலைவர் கோகுல்தாஸ், 161 பேரிடம் தொடர் விசாரணை நடத்தினார். இதனிடையே, இதுவரை ஆஜராகாத 11 பேருக்கும் சம்மன் அனுப்ப ஒருநபர் கமிஷன் தலைவர் கோகுல்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரபல மதுபான வியாபாரிகள் உள்பட 24 பேரை கைது செய்த நிலையில், 11 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.