சென்னை: விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தினசரி பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி, இன்றும், நாளையும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 715 பேருந்துகளும், சென்னை, கோவையில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணிக்கு 150 பேருந்துகளும், மாதவரத்தில் 40 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,105 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை கண்காணிக்க, குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வார இறுதி நாட்களில் பயணம் செய்ய இதுவரை 11,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, திங்கள்கிழமை அனைத்து இடங்களில் இருந்தும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.