சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களில் 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வார இறுதி நாட்கள் மற்றும் முஹூர்த்தம் காரணமாக வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், தமிழகம் முழுவதும் பிற இடங்களுக்கும் பயணிகள் அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தினசரி பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்சிக்கு 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 370 பேருந்துகளும், 26-ம் தேதி (சனிக்கிழமை) 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 60 பேருந்துகளும், 26-ம் தேதி (சனிக்கிழமை) 60 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து 26-ம் தேதி 20 பஸ்களும், 27-ம் தேதி 20 பஸ்களும் என மொத்தம் 1,170 பஸ்கள் இந்த வார இறுதியில் இயக்கப்பட உள்ளன. இதேபோல், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்குத் திரும்ப பயணிகள் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 7,970 பயணிகளும், சனிக்கிழமை 5,115 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 7,189 பயணிகளும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நெடுந்தூரம் செல்லும் பயணிகள், நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in மற்றும் செயலி மூலம் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி பயணம் செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.