சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி 3 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பௌர்ணமி மற்றும் சனிக்கிழமை வார விடுமுறையை ஒட்டி, தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று முன்தின நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளில், 2,092 பேருந்துகள், 1,153 சிறப்பு பேருந்துகள் என, 3,245 பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 11ம் தேதி, 2,092 வழக்கமான பஸ்களும், 712 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு, 1,54,220 பேர் பயணம் செய்தனர். 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அதிகாலை 2 மணி வரை 6,049 பஸ்களில் 3,32,695 பயணிகள் பயணம் செய்தனர்.

மேலும் பௌர்ணமியையொட்டி ஏராளமான பயணிகள் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, அடையாறு பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில், இந்த 4 பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் 244 பேருந்துகளுடன் கூடுதலாக 504 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன.