இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த அளவிலான சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று கோவை மாவட்டம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவின்படி, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ., ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் 15 செ.மீ., அடையாமடை, கன்னியாகுமரி மாவட்டம் ஊத்துக்குமரை மாவட்டம் பேச்சிப்பாறையில் 13 செ.மீ., திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 12 செ.மீ. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டை மேடு, திருப்பூர் தெற்கில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.