சென்னை: தேசிய சட்ட சேவைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முகமது ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப் பணிகள் ஆணையச் சட்டம் 1987 அக்டோபர் 11-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1995 நவம்பர் 9-ம் தேதி அமலுக்கு வந்தது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் 1995-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அமலுக்கு வந்தது. சமூகத்தின் ஏழைகள் மற்றும் எளிய மக்கள் மற்றும் பாமர மக்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கவும், இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்கவும், மக்கள் நீதிமன்றமான லோக்-அதாலத் மூலம் மத்தியஸ்தம் செய்யவும் இது வழிகாட்டுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் மாநில சட்டப் பணிகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்தந்த மாவட்ட நீதிபதி தலைமையில் மாவட்ட அளவிலும், அந்தந்த தாலுக்கா நீதிமன்றங்களில் தாலுக்கா அளவிலும் சட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில், சட்ட சேவைகள் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, லோக் அதாலத், மத்தியஸ்தம் மற்றும் இலவச சட்ட உதவி போன்ற மாற்று தகராறு தீர்வு முறைகள் மூலம் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சட்ட சேவைகளை வழங்குகிறது. இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்கும், உடனடி நீதியை உறுதி செய்வதற்கும் இது ஒரு தனித்துவமான முயற்சியாகும்.
சட்ட சேவைகள் ஆணையச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் உரிமைகள் குறித்து அனைத்து தரப்பு மக்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டப்பணிகள் ஆணையத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்துவது அவசியம். ‘அனைவருக்கும் நீதி கிடைக்க சம வாய்ப்பு’, ‘வானம் விழுந்தாலும் நீதி வெல்லும்’ என்ற மந்திரத்துடன் மாநில, மாவட்டம், தாலுகா அளவில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.