சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து பலவீனமடையலாம். அதே நேரத்தில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும். இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம், காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் மிக கனமழை பெய்யக்கூடும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 18-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரம் 5 நாட்களில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் 26 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 23 செ.மீ., நாலுமூக்கில் 22 செ.மீ., தூத்துக்குடி விமான நிலையத்தில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 19 செ.மீ., மாஞ்சோலையில் 18 செ.மீ., மணிக்கு 16 செ.மீ. தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் ராமநத்தம் அணையிலும், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையிலும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும் 15 செ.மீ. பதிவானது.
17 மற்றும் 18-ம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.