தஞ்சாவூர்: புதுடெல்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த மலைப்பயிர்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், நம்பிவயல், நடுவிக்கோட்டை, உஞ்சியவிடுதி, கிராம பட்டியலின தென்னை விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
மேலும், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய ஒரு நாள் நேரடி நிலையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மையர் முனைவர் க.வெங்கடேசன், (தோட்டக்கலை), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (மலைப்பயிர்கள்) முதன்மை விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.அகஸ்டின் ஜெரால்டு ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை.குமணன் வரவேற்று பேசுகையில், தற்போது உள்ள தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொருளாதார நிலை முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர் ம.சுருளிராஜன், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும், உதவிப்பேராசிரியர் (பூச்சியியல்) முனைவர் நா.முத்துக்குமரன்
தொழில்நுட்ப உரையாற்றி, செயல் விளக்கங்ககளை செய்து காட்டினர்.
இணைப்பேராசிரியர் (உழவியல்) முனைவர் ந.செந்தில்குமார் ஒருங்கிணைந்த பயிர் பண்ணையம் மூலம் லாபகரமான தென்னை சாகுபடி பற்றி விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், தென்னைக்கு பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள் மற்றும் தென்னை டானிக் செலுத்துதல் பற்றிய செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. தென்னை விவசாயிகளின் கேள்வி பதில், முன்னோடி விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரிமாற்றம் போன்றவை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின், நிறைவாக பட்டியலின தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான பண்ணை இடுபொருட்களை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வழங்கினார்.
இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர். .சுருளிராஜன், இளநிலை ஆராய்ச்சியாளர், அ. வள்ளிநாயகம், வேளாண் உதவி அலுவலர்கள் பி.விஜயலலிதா, பி.சுந்தரி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.