கோவை மாவட்ட பொள்ளாச்சியில் நகராட்சியின் இணைப்புத் திட்ட சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. இந்தச் சூழலில் அப்பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற பெண் தனது குடும்பத்தினர் உடன் ஆலோசித்து 80 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.32 கோடியாகும்.
பொள்ளாச்சி – பல்லடம் சாலை மற்றும் சின்னாம்பாளையம் சாலையை இணைக்கும் 66 அடி சாலை திட்டம் 1968 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல தடைகளால் அது நிறைவேறாமல் போனது. 2009ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மீண்டும் பணிகளை தொடங்கியபோதும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன.
சாந்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலமும் இதே பாதையில் இருந்தது. நகராட்சி நிர்வாகம் நிலம் கொடுக்க கேட்டபோது அவர்கள் மறுத்ததால் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு எதிராக சாந்தாவின் கணவர் ஜெயராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் நகராட்சிக்கும், குடும்பத்திற்கும் இடையே நீண்ட கால மோதல் நிலவியது.
சமீபத்தில் நகராட்சி ஆணையர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி 49 லட்சம் வரி தீர்வுகண்டார். இதனால் மனநிறைவு அடைந்த சாந்தா, தனது குடும்பத்துடன் ஆலோசித்து நிலத்தை முழுமையாக தானமாக வழங்க முன்வந்தார். 40 சென்ட் நிலத்தை அவர் பெயரிலும், மற்ற 40 சென்ட் நிலத்தை அவரது மகன் மற்றும் மகளின் பெயரிலும் சேர்த்து வழங்கியுள்ளார்.
சாந்தா கூறியதாவது, “இது என் கணவரின் பூர்வீகச் சொத்து. சாலை அமைப்பது பொது நலனுக்காக என்பதால் மன நிறைவோடு நிலத்தை தானமாக வழங்குகிறேன். வழக்குகளையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்” என்றார்.
இந்த முடிவால் பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த சாலைத் திட்டம் விரைவில் நிறைவேறும் என நகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.