சென்னை: சென்னை மற்றும் புறநகரில் ஆவின் வெண்ணெய், நெய் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவின் பால் கொள்முதலை பொறுத்தவரை, கடந்த 2023-ம்ஆண்டில் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டராக இருந்தது.
இது,கடந்த ஏப்ரலில் 26 லட்சம் லிட்டராக சரிந்தது. இதனால், வெண்ணெய், நெய் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டு, கடைகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனிடையே, ஆவின் பால் கொள்முதல் தற்போது தினசரி 36 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஆவின் பண்ணைகளில் வெண்ணெய் உற்பத்தியும் சீராக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆவின் பண்ணைகளில் வெண்ணெய் உற்பத்தி சீராக நடைபெறுகிறது. உப்பு கலந்த மற்றும் உப்பு கலக்காத வெண்ணெய் 100,500 கிராம் பாக்கெட்களில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, நெய் 50கிராம் முதல் 5 லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் ஆவின்பாலகங்கள் உட்பட எல்லா இடங்களில் ஆவின்நெய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’ என்றனர்.