சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2°-4° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஓரிரு இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸாகவும் இருக்கும்.
தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரிகடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடா பகுதிகளில் இன்று, வடக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஒரிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் அவ்வப்போது 75 கி.மீ வேகத்திலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. இடைப்பட்ட 65 கிமீ வேகத்துடன், தெற்கு வங்காள விரிகுடா பகுதிகள், 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று மற்றும் மத்திய வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதிகளில் அவ்வப்போது 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
இன்றும் நாளையும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்குப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.