சென்னை: செல்போன் பயன்படுத்தியபடி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, அரசுப் பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால், முதற்கட்டமாக 29 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.
சமீப காலமாக ஓட்டுனர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உறுதியான உத்தரவை அனுப்பி, இந்த விதியை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் கனகராஜ், பேருந்தை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஓட்டுனர் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.