மதுரை: சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி முழுவதும் இருந்து வெளியேறும் கழிவுநீர் அக்னி தீர்த்தம் அருகே கடலில் கலக்கிறது. பக்தர்களால் புனிதமாக கருதப்படும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நகராட்சி கமிஷனர் பதிலளிக்கவும், ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், அ. டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜரானார்.
நகராட்சி வக்கீல் வாதிடுகையில், “ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பதற்காக ஓலைக்குடா பகுதியில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு தற்போது அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதனால் அக்னிதீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு, அங்குள்ள 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், பல்வேறு வகையான மரங்கள் வளர்க்க பயன்படுத்தப்படும்,” என்றனர். பின், விசாரணையை, ஜனவரி, 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.