புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தி.மு.க., அரசு மீது பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் தான், காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரிமளம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மாணவிகளின் எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாரையும் பழிவாங்கும் போக்கை அரசு ஆதரிக்காது. குற்றம் நடக்கும் முன் தடுக்க முடியாது. அதே சமயம் குற்றம் நடந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் கருத்து நீதித்துறை அமைச்சகத்தில் தெரிவிக்கப்படும். ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒரு மொழியைப் பேணி வளர்ந்தன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை போதும், மும்மொழிக் கொள்கை தேவையில்லை. ஆனால் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமி மத்திய அரசுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பதால் மத்திய அரசை நேரடியாக விமர்சிப்பதில்லை. அதிமுக உட்கட்சி பூசல் என்பது மத்திய அரசு விளையாடும் ஏமாற்று விளையாட்டு. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.