தஞ்சாவூர்: ஆயுத பூஜையின் போது பூசணிக்காயை நடுரோட்டில், பொதுவெளியில் உடைக்க கூடாது என ஏஐடியூசி மோட்டார் பழுது பார்ப்போர் நலச்சங்கம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மோட்டார் பழுது பார்ப்போர் நல சங்கம் மாதாந்திர கூட்டம் நேற்று தஞ்சாவூர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா தலைமை வகித்தார். கூட்டத்தில் நாளை ஆயுத பூஜை நடைபெறுகிறது.
ஆயுத பூஜையை சிறப்பாக நடத்த அனைத்து தொழிலாளர்களாலும், அனைத்து தரப்பினர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையின் முடிவில் பூசணிக்காயை நடுரோட்டில், பொதுவெளியில் போட்டு உடைப்பதால் விபத்துக்கள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆதலால் ஆயுத பூஜை முடித்துவிட்டு ரோட்டில் பூசணிக்காய் உடைக்காது, அவரவர் இடங்களின் அருகிலேயே பூசணிக்காய் உடைக்க வலியுறுத்த வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட ஏஐடியுசி மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கிறது. கூட்டத்தில் சங்கத் தலைவர் யோகானந்தம், செயலாளர் சதாசிவம், பொருளாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஜோசப்தன்ராஜ், சூசைமாணிக்கம், தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.