சென்னை: திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அமமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் மீது திமுக அரசு எண்ணற்ற சுமையை ஏற்றி வருகிறது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த பிறகு 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, சொத்துவரி, குடிநீர், கழிவுநீர்க் கட்டணம், பால், பால் பொருட்களின் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, முத்திரைக் கட்டணம், சாலை வரி போன்றவை உயர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது தவிர போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. திமுக அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அமமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை வள்ளுவர் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.