சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை-கூடூர், அரக்கோணம்-ஜோலார்பேட்டை, சேலம்-கோவை ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்டவாளங்களை மேம்படுத்துதல், சிக்னல் அமைப்புகள், பாலங்கள் அமைத்தல், வேகக் கட்டுப்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை-அரக்கோணம்-ஜோலார்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மணிக்கு 130 கிமீ வேகம் வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் உட்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தையும் படிப்படியாக அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதற்கான உள்கட்டமைப்பு பணிகளும் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் – பெங்களூரு – மைசூர் மற்றும் சென்ட்ரல் – கோவை, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வகை ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை. ஆனால் தற்போது அவை மணிக்கு 110 முதல் 130 கிமீ வேகத்தில் ஓடுகின்றன. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. எனவே, வந்தே பாரத் ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ரயில்வே விதிகளின்படி குரூப் ஏ வழித்தடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை-கூடூர், அரக்கோணம்-ஜோலார்பேட்டை, சேலம்-கோவை வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செயல்பட, அடிப்படை கட்டமைப்பு பணிகளை துவக்கியுள்ளோம்.
அதிக வளைவுகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து அகற்றி, பழைய மேம்பாலங்களை அகற்றி, புதிய பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சிக்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், மின் விநியோகத் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு பணிகளையும் முடிக்க 3 ஆண்டுகள் வரை ஆகும். இவ்வாறு கூறினார்கள்.