சென்னை: நாடு முழுவதும் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு முன், ஆக., 20 முதல் அக்., 18 வரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று பட்டியலை சரிபார்த்து, ஓட்டுச்சாவடிகளை சீரமைத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரி செய்ய வேண்டும்.
வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களை பெற்று இணைத்தல், உரிய பகுதி எண்ணின் அடிப்படையில் அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடி அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அக்டோபர் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை அதற்கான படிவங்களை தயாரித்து, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
அதன்பின், அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.அன்றிலிருந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணியை துவக்க வேண்டும். நவம்பர் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் பரிசீலனையை டிசம்பர் 24-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஜனவரி 1, 2025க்குள் தரவுகளை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலைத் தயாரித்து துணைப் பட்டியலை அச்சிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிட வேண்டும்.