திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் நோய் தாக்குதலால் மிளகாய் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு மிளகாய் வரத்து குறைந்துள்ளது.
மேலும், நோய் தாக்கிய மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து பச்சை மிளகாய் கொண்டு வரப்பட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரமான மிளகாய் கிடைத்ததால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பச்சை மிளகாயை கொள்முதல் செய்தனர்.
இந்நிலையில், ஆண்டிபட்டியில் தொடர் கனமழையால் வாழை இலை வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், வாழை இலைகளை வாங்க வியாபாரிகள் முன்வராததால், கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு வாழை இலை, ரூ.200-க்கு ஏலம் போனதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.