தமிழக அரசு வெற்று விளம்பரங்களுக்கு பணம் செலவழிக்கிறது ஆனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மே மாதத்திற்கான சம்பளத்தை பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பலர் ஓய்வூதியதாரர்களுடன் சேர்ந்து நிதியளவில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஆசிரியர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கல்வித்துறையை கேலிக்குரிய நிலைக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சியின் பெருமை எனவும் விமர்சித்தார்.
திமுக அரசு வெறும் விளம்பரங்களுக்காக பணத்தை வீணடிக்கிறது என்றும், மாநிலத்தின் கடன் ஏற்கனவே ₹9 லட்சம் கோடியை கடந்துவிட்டதாகவும் கூறிய அண்ணாமலை, இத்தகைய நிலையில் சம்பளம் தர இயலாதது ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறையை உருவாக்கும் பேராசிரியர்களுக்கே சம்பளம் வழங்க இயலாத நிலை ஏன் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். எனவே, தாமதம் இல்லாமல் மே மாத சம்பளத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இந்த நிலைமையை ஏற்படுத்த விடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.