சென்னை: 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.