சென்னை: ”சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாணவர் நலனுக்கு எதிரான திமுக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவு இப்போது அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கு தாமதமின்றி உணவு கிடைக்கிறது. இத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், சத்தான உணவுகள் தயாரிப்பது போல், பள்ளிகளிலேயே காலை உணவை தயாரித்து வழங்குவது சரியாக இருக்கும்.

மாறாக, இந்தப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால், அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். சென்னையில் உள்ள 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 35 மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் காலை உணவு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 11 பள்ளிகளுக்கு ஒரே இடத்தில் உணவு தயாரித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கொண்டு செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.
இதனால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் சூடாக உணவு கிடைப்பதில்லை. இது காலை உணவு திட்டத்தின் நோக்கத்தை தோற்கடிக்கும். 2023 நவம்பரில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தபோது, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஏற்கனவே கைவிடப்பட்ட திட்டத்தை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்துவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. காலை உணவு திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சூடான உணவு கிடைக்க வேண்டும் என்பதே. அதை உறுதி செய்ய, சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும், காலை உணவு தயாரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு சத்துணவு திட்டத்துக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமையலறைகளில் காலை உணவு தயாரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.