சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள வேளாண் அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2023 தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண் அலுவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
புதிதாக அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை பெற்ற தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு பணி நியமன ஆணைகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, வேளாண்மைத் துறை செயலர் அபூர்வா, துறை தனிச் செயலர் பி.சங்கர், வேளாண் இயக்குநர் பி.முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் ப.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.