சென்னை: பள்ளிகளில் ஆய்வு நடத்த மாவட்ட வாரியாக 30 கண்காணிப்பு அதிகாரிகளை பள்ளிக் கல்வித்துறை நியமித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து கண்காணிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவள்ளூர் பம்மத்துக்குளம் அரசுப் பள்ளி வருகைப் பதிவேடுகளைக் கண்காணிக்காத தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் விழுப்புரம் கோலியனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பிரச்னையால் அதன் மாவட்ட கல்வி அலுவலரும், செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையான அறிவிப்பின்றி நீண்ட விடுப்பு எடுத்த ஆசிரியரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தொடர் நடவடிக்கையால், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித்துறை கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ. மதுமதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பி.சங்கர் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி (செங்கல்பட்டு), பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் (மதுரை), தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ். (திருவள்ளூர்), தனியார் பள்ளிகள் இயக்குநர். மு.பழனிசாமி (சென்னை) உள்ளிட்ட 30 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மாதம் ஒருமுறை பள்ளிகளை ஆய்வு செய்து, 5-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். காலை உணவு, மதிய உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வருகையையும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் காலி பணியிட விவரம் குறித்து விசாரிக்க வேண்டும்.
இது தவிர முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி உபகரணங்கள் இருப்பு, தணிக்கை விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.