மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி தொகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு, நவ., 7-ல் வழங்கப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழக அரசு அறிவித்த அரிட்டாபட்டி பல்லுயிர் பெருக்கத்தை இழந்து, பெரியாறு பாசன விவசாய நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அழகர்கோவில் காப்புக்காடுகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. இப்பகுதி மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது வாழ்வாதாரம் மட்டுமின்றி, வாழ்விடமும் அழிக்கப்பட்டதால், பல கட்ட போராட்டங்களை தொடர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் உடனடியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்தது. இதையடுத்து, அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, டிச., 24-ல், மத்திய அரசு உத்தரவிட்டது.
டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில், அந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த மேலூர், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரன், சாமிக்கண்ணு, ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் ஆகியோர் டெல்லிக்கு அழைத்து சென்றனர். புறநகர் மாவட்ட தலைவர் ராஜசிம்மன். அவர்கள் டெல்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளனர். அவர்களை சந்தித்த பின், அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என கூறப்படுகிறது.