புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதில் மகாதேவன் படகில் பிரதீப், ரஞ்சித், பிரபாகரன், அஜித் ஆகிய 4 பேரும், செந்தில்குமார் படகில் விஷ்வா, ஆனந்தராஜ், ஆனந்தபாபு, குபேந்திரன், சேகர் ஆகிய 5 பேரும், மணிகண்டன் படகில் மணிகண்டன், முத்துக்குமார், செல்லத்தம்பி, செல்வம், சுரேஷ் ஆகிய 5 பேரும் இருந்தனர்.
நேற்று மாலை அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 14 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது மற்றும் விசைப்படகுகளை பறிமுதல் செய்வது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.