தஞ்சாவூர்: உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்களை அழிக்க வேண்டும் எனக் கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமானது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராஜா (45). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது அவர், நான் தல்லாரகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் எனக்கூறி, ஒரு நபரை கைது செய்த போது அவரது செல்போனில் உங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.
இந்த ஆபாச படங்கள், வீடியோக்களை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் பொய்யான தகவலை கூறியுள்ளார். மேலும் அவரை மிரட்டி ஏமாற்றும் உள்நோக்கத்தில் ரூ.7 ஆயிரத்தை பெற்றுக் கொண்டதாக ராஜா தஞ்சை சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்காணித்தனர். அப்போது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாறி, மாறி அவரது செல்போன் எண் காண்பித்தது. இதையடுத்து அந்த மர்மநபரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக், ஏட்டு இளையராஜா, போலீசார் சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த மர்ம நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கோஸ்கோட் என்னும் இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.
இவர், தனது செல்போனில் இருந்து ஏதாவது ஒரு நம்பரை தொடர்பு கொண்டு தான் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என கூறி அவர்களை மிரட்டி, அவர்களது தகவல்களை எல்லாம் அனுப்ப சொல்லி, அதில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது ஆபாச படங்கள் மற்றும் வீடியோ உள்ளது என தன்னிடம், அதை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் எனவும், அதற்கான தொகையை அனுப்ப வேண்டும் எனவும் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலிசாரின் விசாணையில் தெரியவந்தது. தொடர்ந்து பாண்டிய பிரகாசை போலீசார் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் துறையில் இருந்து பேசி பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி பணம் கேட்டால் அதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.