சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் இரு கோஷ்டியினர் மோதிக்கொண்ட வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கொடுங்கையூர் செந்தில்நாதன், சக்திவேல், தினேஷ்குமார், அயனாவரம் விஜயகுமார், ராயபுரம் விமல் ஆகியோர் வக்கீல்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வக்கீல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வக்கீல்கள் கே.ஹரிஹரன், கடம்பத்தூர் கே.ஹரிதரன், மணலி சிவா, வியாசர்பாடி அஸ்வதாமன் ஆகியோர் வக்கீல்களாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், முகநூலில் அவதூறான பதிவுகளை வெளியிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மணியரசனும் வழக்கறிஞர் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.