சென்னை: புதிய திட்டம்… சென்னையில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் 17 சுரங்கப்பாதைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கி தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்யும் திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.
60 லட்சம் முதல் 93 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தால், சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்குவது தடுக்கப்படும்.
சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் அளவு மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தால் கணக்கிடப்பட்டு, நீர்மட்டம் குறிப்பிட்ட உயரம் அடைந்ததும், சுங்கச்சாவடிகளில் உள்ளதைப்போல் தானியங்கி தடுப்புகள் தானாகச் செயல்பட்டு போக்குவரத்தை தடை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ள தகவல், மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும், வெள்ள நீர் வடிந்ததும் தடுப்புகள் தானாக விலகிக்கொள்ளும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.