சென்னை: தமிழக மீனவர் குழுவுடன் இன்று டெல்லி செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிநாடு செல்கிறார். அரசியலை படிக்க சில மாதங்கள் இங்கிலாந்தில் தங்கப் போகிறார்.
அண்ணாமலை 3 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது இங்கிலாந்து பயணம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம்தான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மீனவர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க தமிழக மீனவர் பிரதிநிதிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.
அவருடன் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தொடரும் தாக்குதல், கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட மீனவர் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.