சென்னை: மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: கிராமப்புற, ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை வழங்கும் வட்டியில்லா கடன் திட்டம், விக்சித் பாரத் திட்டம், டாக்டர் அம்பேத்கர் மத்திய கல்விக் கடன் திட்டம், வித்யா லட்சுமி கல்வித் திட்டம் மூலம் மாணவர்களின் கனவு நனவாகி வருகிறது. தமிழகத்தில் தகுதியான மாணவர்களின் உயர்கல்விக்கு வசதியாக, வங்கிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் இணைந்து கல்விக் கடன் திட்டங்களை எளிமைப்படுத்தி, விரைவாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தன்னார்வ இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது அதிக மாணவர்கள் பயனடைவார்கள். பிரதமரின் மிக எளிமைப்படுத்தப்பட்ட விரைவான கல்விக் கடன் திட்டம், இந்திய மாணவர்கள் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பில் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கான ஒரு மைல்கல்லாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.