சென்னை: நீதிமன்றம் வேதனை… மக்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்து, அரசு எந்தவொரு திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை குறை சொல்லவும், அதற்கு முட்டுக்கட்டை போடவும் ஒரு பெரிய கூட்டம் கிளம்பி வந்து விடுகிறது’ என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம் கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களையும் நெடுஞ்சாலை பிரிக்கிறது. இங்கு புதிய பஸ் நிறுத்தம் கட்ட, மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. அதற்கு, பெயர் சூட்டும் விவகாரத்தில் இரு கிராமங்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சமீப காலமாக, மக்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்து, அரசு எந்தவொரு திட்டங்களையும், அடிப்படை வசதிகளையும் கொண்டு வந்தாலும், அதை குறை சொல்வதற்காகவே, ஒரு பெரிய கூட்டம் வந்து விடுகிறது.
உடனே அந்த திட்டத்துக்கு தடை கோரியும், முட்டுக்கடை போடவும், நீதிமன்றத்துக்கு வந்து விடுகின்றனர். டீக்கடையில் பகல் முழுதும் உட்கார்ந்து பேசி, இதுபோல நீதிமன்றத்துக்கு வந்து விடுகின்றனர். வேலை வெட்டிக்கு செல்லாமல், இதுபோன்ற விஷயங்களில், அதிக கவனம் செலுத்துகின்றனர்.
மேலும், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அதை பரப்புவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, இவை அவர்களுக்கு மிகவும் உதவுகின்றன. அதனால், இந்த மனுதாரருக்கு அபராதம் விதிக்க போகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதை கேட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.