
சென்னை: நூற்றுக்கணக்கான மருந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களின் செயல்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை கண்காணித்து வருகிறது. குறிப்பாக மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்படுகிறது.
முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், விசாரணை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மனநல மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் முறைகேடு விற்பனை நடப்பதை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

விழுப்புரம், திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடர் சோதனை நடத்தப்பட்டது. தீவிர விசாரணை நடத்தி, முதல்கட்டமாக மருந்தகங்கள் மற்றும் மொத்த விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில மருந்து உரிமம் மற்றும் ஒழுங்குமுறை அலுவலர் எம்.என். ஸ்ரீதர் கூறுகையில், ”மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது தவறு.
சில முக்கியமான மருந்துகளை விற்பனை செய்வது சட்ட விரோத செயல்களுக்கு வழிவகுக்கும். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருத்தடை மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன,” என்றார்.