ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 20-ம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுவதற்காக, வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் அச்சிடப்பட்ட ‘ஓட்டு சீட்டு’ அச்சடிக்கும் பணி சென்னையில் நடந்தது.
இப்பணி நிறைவடைந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜனவரி 29) காலை வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்வர்கள் மற்றும் முகவர்கள் சோதனைக்குப் பிறகே பணிகளை கவனிக்க அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன் கூடிய ‘ஓட்டு சீட்டை’ பொருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே பொருத்த முடியும் என்பதால், 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா உட்பட மொத்தம் 47 பேர் களத்தில் உள்ளதால், ஒரு வாக்குச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
அதன்படி, 237 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 852 வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் அச்சிடப்பட்ட ‘ஓட்டு சீட்டு’ இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணி இன்னும் 3 நாட்களில் முடிவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.